இலங்கையின் மிக பெரிய சீமெந்து தொழிற்சாலையான லங்வா சங்ஸ்தா நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று(07.03) ஹம்பாந்தோட்டை, மாகம்புர லங்கா கைத்தொழில் பேட்டையில் இந்த தொழிற்சாலையினை ஆரம்பித்து வைத்தனர்.
அதி நவீன வசதிகளை கொண்ட இந்த தொழிற்சாலை, ஐரோப்பிய தொழில்நுட்ப இயந்திரங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் 28 லட்சம் மெற்றிக் தொன் சீமெந்து தயாரிப்பினை இந்த புதிய தொழிற்சாலையில் மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
சீமெந்து தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் சீமெந்து தட்டுப்பாடு இலங்கையில் இல்லாமல் போகுமென்ற எதிர்பார்ப்பு அண்மைக்காலமாக காணப்பட்ட நிலையில், இன்று இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய கட்டுமாண பணிகளான கொழும்பு துறை நகர், அதிக வேக நெடுஞ்சசாலைகள் உட்பட பல நிர்மாண பணிகளுக்கு இந்த சீமெந்து பாவிக்கப்படுமென்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் சீமெந்து சந்தைக்கு எப்போது வெளியிடப்படும், மக்கள் எப்போது இந்த சீமெந்தினை பாவிக்க முடியும் என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.