அண்மையில் நிறைவடைந்த இலங்கை – இந்தியா 20-20 தொடர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் இலங்கை அணி மிக மோசமான களத்தடுப்பை வெளிப்படுத்துயிருந்தது. இது கடும் விமர்சனத்தையும் உருவாக்கியிருந்தது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நொட்டிங்காம்ஷெயார் பிராந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரரான அன்டன் ரௌக்ஸ், இங்கிலாந்து ரென்ட் பிரிட்ஜ் பகுதியிலிருந்து இலங்கை அணியுடன் இணைவதாக கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அன்டன் ரௌக்ஸ், நொட்டிங்காம்ஷெயார் அணிக்காக சிறப்பாக செயற்பட்டதாகவும், அவரின் பயிற்றுவிப்பில் அணி களத்தடுப்பில் நல்ல முன்னேற்றத்தை கண்டதாகவும் அந்த அணியின் பணிப்பாளர் மிக் நெவல் புகழாரம் சூட்டியுள்ளார்.
ட்ரென்ட்பிரிட்ஜ் இலிருந்து வெளியேறுவது தனக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள அன்டன் ரௌக்ஸ், தனது குடும்ப நலனுக்காகவும், உயரிய பதவி ஒன்று கிடைப்பதனாலும் அங்கு இருந்து பிரிந்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளார்.
40 வயதான அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ரௌக்ஸ், இலங்கை அணியோடு இணைவது தனக்கு மகிழ்ச்சியான விடயமாக இருப்பதாகவும், இலங்கை அணியோடு இணைந்து கடமையாற்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
