இலங்கை தமிழருக்கு பொருட்கள் அனுப்ப அனுமதி கோரினார் தமிழக முதல்வர்

இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறும் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அக்கடிதத்தில், கடந்த 31-3-2022 அன்று இந்தியப் பிரதமர் அவர்களை தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ​​இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 7-4-2022 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதை தான் தெரிவித்த போது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து, அதற்குப் பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கலாம் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள இந்தத் தருணத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு, தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியோடு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு, இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார.

கடந்த 23-3-2022 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் கைது தொடர்பான வழக்கினை விசாரித்த கிளிநொச்சி நீதிமன்றம், பிணையில் செல்ல ஒரு மீனவருக்கு இலங்கை ரூபாயில் 2 கோடி செலுத்திவிட்டு, தனிப்பட்ட பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டும், மீனவர்களால் அவ்வளவு பெரிய பிணைத் தொகையைச் செலுத்த இயலாத காரணத்தினால், 12-5-2022 வரை அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவ்விஷயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளைச் உறுதி செய்திடுமாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார் என குறித்த தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழருக்கு பொருட்கள் அனுப்ப அனுமதி கோரினார் தமிழக முதல்வர்

Social Share

Leave a Reply