அண்மையில் சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுள்ள நஸீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் முடிவுகளை மீறி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியது தொடர்பாக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிலிருந்து இடைநிறுத்தி அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அவர்கள் விளக்கங்களை எழுத்து மூலமாக வழங்கியிருப்பதாக தெரிவித்த ஹக்கீம், நஸீர் அஹமட் போலியான விடயங்களை கூறியுள்ளதாகவும், அவரது விளக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தினாலும் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு மற்றைய மூவருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள மூவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள போதும், அவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடருமென ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
