இன்று தராக்கியை நினைவு கூருகின்ற முக்கியமான நாள். ஊடகத் துறையில் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியவை. சர்வதேச அங்கீகாரம் பெற்றவை. அதையும் தாண்டி தமிழ்த் தேசிய இனம் சார்ந்த பற்றுதியோடு பயணித்தவர் அமரர் தராக்கி சிவராம் என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
அவருடைய சமகாலத்து கிழக்கிலங்கை ஊடகவியலாளர்களின் சிந்தனை, பங்களிப்பு என்பவை தமிழ்தேசிய வரலாற்றிலே பதியப்பட வேண்டியவை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு பாரிய கட்டமைப்பு தமிழர் அரசியல் களத்தில் உருவாக்குவதில் வித்திட்டு வெற்றி கண்டவர்கள். அதன் முன்னோடியாக செயற்பட்டவர் அமரர் தராக்கி சிவராம். அவருடைய தலைமையில் கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆற்றிய பங்கு இங்கு பதிவிடப் படவேண்டியது வரலாற்றின் அவசியம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுரேந்திரனின் அறிக்கையில் மேலும் கீழுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த வேளையிலே தமிழர் பிரதிநிதித்துவம் வெகுவாகப் பாதிப்பு அடைந்திருந்தது. குறிப்பாக 74 வீதத்திற்கு மேலான தமிழ் மக்கள் சனத்தொகையை கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழர்களின் பிரதிநித்துவம் 2 ஆகக் குறைந்திருந்தது. திருகோணமலையில் திரு தங்கத்துரை வெற்றி பெற்று இருந்தார். வன்னி மாவட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனது சொந்த கலங்கரை விளக்கு சின்னத்தில் மூன்று ஆசனங்களை பெற்று பெரு வெற்றியை ஈட்டி இருந்தது.
இதன் பின்னணியில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை காரியாலயத்தில் அப்போதைய செயலாளர் நாயகம் பிரசன்னா இந்திரகுமார் மறைந்த சிவராம் அவர்கள் உட்பட சில ஊடகத்துறை முக்கியஸ்தர்கள் சந்திப்பு ஒன்று நடந்தது.
வடக்கு கிழக்கில் தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தை எந்த வகையிலே அதிகரிக்க முடியும் என்பதான கலந்துரையாடலாக அமைந்திருந்தது. சண் தவராஜா, நடேசன், அரியநேந்திரன், உதயகுமார், ஜெயானந்தமூர்த்தி ஆகிய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். சில பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். இந்தக் கலந்துரையாடலில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கான எண்ணக்கரு உதித்தது. அதே “போதி” மரத்தின் படத்தை இணைத்துள்ளேன். எந்த இடத்தில் தராக்கி அன்று அமர்திருந்தாரோ அதே இடத்தில் பிரசன்னாவுடன் அமர்ந்திருந்தேன். தமிழர் வரலாற்றில் தடம் பதிக்க காரணமாக அமைந்த ரெலோவின் அலுவலகமும் அந்த மரமும்.

சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பது எப்படி என்று ஆலோசித்த வேளையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோவிடம் அந்த பொறுப்பை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது. தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டார். இனம் சார்ந்த நடவடிக்கை என்ற படியினாலே உடனடியாக ரெலோ தரப்பிலே சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையின் கிழக்கிலங்கையில் இருந்த அலுவலகத்தில் முதல் சந்திப்பு நடைபெற்றது. அதற்குப் பின்னால் வாகரை ஊடாகவும் காட்டுப் பாதைகளின் ஊடாகவும் பயணித்து புலிகளின் தலைமைப் பீடத்தினோடு பேச்சுவார்த்தைகள் பல நடைபெற்றன. அதன் விளைவாக மற்றைய கட்சிகள் உள்வாங்கப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பவையே அவை. இதற்குப் பின்னர் நடந்தவை எல்லாம் அனைைரும் அறிந்த வரலாறு.
அதில் இடையிட்டு வந்தவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தங்களுடைய குடும்ப சொத்து போலவும் அதன் முதுகில் சவாரி செய்து கொண்டு ஆரம்ப கர்த்தாக்களை விமர்சனம் செய்து வருவதை நாங்கள் காணமுடியும். இவர்கள் வரலாற்றை அறியாதவர்கள். ஆனால் தங்களுக்கு வரலாறு தெரியும் என்பது போல் பாசாங்கு செய்பவர்கள். தவறான வரலாறுகளை மக்கள் மனதில் புகுத்த முற்படுபவர்கள். இவையெல்லாம் தங்களுடைய இருப்பை தக்க வைக்க இவர்கள் செய்கின்ற புரட்டு நடவடிக்கைகள் என்றால் மிகையாகாது.
இதில் மிகுந்த வேடிக்கை என்னவென்றால் மூத்த ஊடகவியலாளர்கள் என தங்களை கூறிக்கொள்பவர்கள் தமது சுயலாபத்திற்காக வரலாற்றை திரிப்பவர்களுடைய செயல்களுக்கு காவடி தூக்கி நி்ற்பதே ஆகும்.
ஆகவே கூட்டமைப்பை ஆரம்பித்தவர்கள், யார் அதை அர்ப்பணிப்போடு உருவாக்கம் செய்தவர்கள் என்பது வரலாற்றில் பதிவிடப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். இதை தெரிந்து கொள்ளாதவர்கள், தேர்தலிலே வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் வரலாற்றை மறந்து, மறைத்து பிதற்றுகிறார்கள்.
அத்தோடு பாரிய எதிர்பார்ப்புகளும் விலையும் கொடுத்து உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை சின்னாபின்னப் படுத்தும் நோக்கத்துடன் பலர் செயலாற்றி வருவதையும் காணமுடியும்.
இதில் அர்ப்பணிப்போடு தியாகத்தோடு கூட்டமைப்பை உருவாக்குவதற்கு ரெலோ அரும்பாடுபட்டது. கூட்டமைப்பு என்றால் ரெலோ தான் என்பதற்கான தெளிவு இந்த கட்டுரையின் மூலம் கிடைத்திருக்கும்.
ரெலோ கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்பது உரிமையாளரை, இடையிலே வந்து புகுந்தவர்கள் வெளியேறு என்று சொல்வதற்கு ஒப்பானதாகும். தங்களுடைய சுயலாப அரசியலுக்காக கூட்டமைப்பின் மீது சவாரி விடுபவர்கள் ரெலோ வெளியேற வேண்டும் என்று சொல்வது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை இந்த அறிக்கை விளக்கும்.
மெளனித்தவர்களின் தியாகங்களோடும் ரெலோவின் பங்களிப்போடும் உருவாகிய கூட்டமைப்பை சிதைத்து விடாது பலமாக கட்டியெழுப்ப ரெலோ தொடர்ந்தும் தன் கடமையைச் செய்யும். விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை, பொறுமை என்பவற்றை கடைப்பிடிப்பதே இதற்குத் தான்.
