இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான தனிப்பட்ட நபர்கள் குற்றமிழைத்தவர்கள் என பொது நிறுவன பாராளுமன்ற குழுவின்(கோப்) தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்று(25.05) கோப் குழு முன்னிலையில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பிலும், தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராய்வதற்காக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையாகியிருந்தனர். அதன் போதே இந்த கருத்து கோப் குழு தலைவர் சரித் ஹேரத்தினால் முன்வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் தொடர்பிலும், அதற்கு காரணமானவர்கள் தொடர்பிலும், உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிய அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது.
பொருளாதாரத்துக்கு பொறுப்பாக இருந்தவர்கள் எடுத்த பிழையான முடிவுகளே நாடு இந்தளவுக்கு பின்னடைவை சந்திக்க காரணமெனவும் அவை குற்றமாக கருதி உடனடியாக விசாரணை செய்யவேண்டுமெனவும் கோப் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“2020 ஆம் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாத பகுதியில் சர்வதேச நாணய நிதிதியத்திடம் கடன் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது மத்திய வங்கிக்கு, சர்வதேச நாணய நிதியம் இலங்கை கடன் நிலைமை இஸ்திரமாக இல்லையென அறிவித்த்துள்ளது. அதற்கு நிலுவையிலுள்ள கடன்களை செலுத்துதல் தொடர்பில் மீளமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக எழுத்து மூலம் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் பதில் வழங்கியுள்ளார்கள்” என தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
