யாழ்ப்பாணத்தில் சமையல் எரிவாயு விநியோகத்துக்கான புதிய நடைமுறை அரசாங்க அதிபரினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு எரிவாயு பாவனையாளர்கள் தங்கள் பிரதேச வாயு விநியோகஸ்தர்களிடம் முற்பதிவினை மேற்கொள்ள வேண்டும். அதனை அந்த பிரிவு கிராம சேவையாளர் ஒரு வீட்டுக்கு ஒரு சிலிண்டர் என்ற அடிப்படையில் முன்னுரிமையில் வழங்கப்படுவதனை உறுதி செய்வார்.
எரிவாயு விநியோகஸ்தருக்கு கிடைத்ததும் முற்பதிவு அடிப்படையில் எரிவாயு வழங்கப்படும். பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் பெறாவிட்டால் பதிவில் அடுத்த இடத்தில இருப்பவருக்கு வழங்கப்படும். கிராம சேவையாளர் பங்கீட்டு அட்டையில் எரிவாயு பெற்றதனை பதிவு செய்தல் கட்டாயமானது என்பதுடன், பங்கீட்டு அட்டையில் உள்ள ஒருவர் பங்கீட்டு அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் சென்றே சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்ள முடியும்.
எரிவாயு சிலிண்டர்களது விநியோகம் தொடர்பான விபரங்கள் யாழ் பிராந்திய விநியோகஸ்தருக்கு வழங்கப்படும். அந்த நிறுவனம் உப விநியோகஸ்தர்களுக்கு மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் பகிர்ந்தளிக்கப்படும்.
உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படாது. அவர்களுக்கு விநியோகஸ்தர்கள் நேரடியாக எரிவாயுவினை வழங்க முடியும்.
ஏற்கனவே இந்த பதிவு நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் உங்கள் பகுதி கிராம சேவையாளர் அல்லது சமையல் எரிவாயு விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு பதிவினை மேற்கொள்ளலாம்.
