குழப்ப நிலைக்குள் மீண்டும் இலங்கை அரசியல்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் வீழ்ந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே பிரதமராக நியமிக்கப்பட்டார் எனவும், அவர் அதனை விட 21 ஆம் திருத்த சட்ட அமுலாக்கத்திலேயே குறியாக இருக்கிறார் எனவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் இதே மாதிரியான கருத்தை வெளியிட்டியிருந்தார். அத்தோடு ரணிலின் பொருளாதர முன்னேற்றம் தொடர்பிலான நடவடிக்கைகளிலேயே அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என கூறியுள்ளார். 

இவ்வாறான சூழ்நிலையில் இன்று ஆளும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியினை சந்திக்கவுள்ளனர். அதன் பின்னரே அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவது  தொடர்பிலான முடிவெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் 21 ஆம் திருத்த சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சில பரிந்துரைகளுடன் தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

இந்தவாரம் பல தரப்பு கலந்துரையாடல்களின் பின்னர் அமைச்சரவைக்கு 21 ஆம் திருத்த சட்டம் சமர்பிக்கப்படுமென சட்ட சீர் திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளும் பொதுஜன பெரமுன பிரதமர் ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், 21 ஆம் திருத்த சட்டம் அமுல் செய்யப்படுவது சாத்தியமற்றதாக மாறிவிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் தான் பதவி விலகுவேன் என பிரதமர் ரணில் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சு பொறுப்பை ஜனாதிபதி பிரதமருக்கு வழங்கியது தொடர்பிலும் பொதுஜன பெரமுன அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அமைப்புகளுடன் பிரதமர் தொடர்புகளில் இருப்பதாகவும், கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் காரணமாகவே அவருக்கு நிதியமைச்சு பதவியினை வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்ததாக பொதுஜன பெரமுன சார்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை ரணில், மத்திய வங்கி ஆளுநரை மாற்றும் நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி உடன்படும் நிலையில் இல்லை என்பதும் அண்மைக்கால சம்பவங்கள் மூலமாக தெளிவாகிறது.

பாராளுமன்றத்துக்கு எந்த அதிகாரங்களும் இல்லையெனவும், அமைச்சரவை சகல விடயங்களையும் ஒரு திட்டத்தோடு நகர்த்தி செல்வதாகவும் பிரதமர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதிகாரத்தை யார் தக்க வைப்பது என்பதும், பதவிகளுக்கான போட்டிகளுமே முன்னிலை பெற்று வருகின்றன. பொருளாதர சிக்கல்களுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறுகிறதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

மக்கள் பொருளாதர ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகம் குழம்பி போயுள்ளனர். சொல்லுபவை எதுவும் நடக்கவில்லை என்ற ஏமாற்றம் பெரியளவில் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு குறைந்த பட்ச தீர்வு எதுவுமில்லாமல் மக்கள் திருப்தியடையப்போவதில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க “பதவி விலகுவேன்” என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டே அண்மைக்கால நடவடிக்கைகளை நகர்த்தி செல்கிறார். சொல்வதனை செய்வாரா அல்லது வேறு வழிகளில் நகர்த்தி செல்வாரா? ஜனாதிபதி மற்றும் ஆளும் பொதுஜன பெரமுன எவ்வாறான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தி செல்லப்போகின்றனர்? இவ்வாறான பல சந்தேகங்களுடனே நாட்டின் நிலை நகர்ந்து செல்கிறது.

ஜனாதிபதியினதும், ஆளும் பொதுஜன பெரமுனவினதும் ஆதரவின்றி எந்த நகர்வையும் தற்போதைய சூழலில் ரணில் சாத்தியமாக்குவது கடினமே.  

குழப்ப நிலைக்குள் மீண்டும் இலங்கை அரசியல்?

Social Share

Leave a Reply