தென் மேல் நைஜீரியா, ஒண்டோ பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்துக்கு பிரார்தனைகளுக்காக சென்றவர்கள் மீது நேற்று(05.06) நடாத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 50 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் கொல்லப்பட்டவர்களின் தொகையினை உறுதிப்படுத்த முடியவில்லையென BBC செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், பாதிரியார் ஒருவரும், தேவாலய பாடல்கள் பாடுபவர்களும் கடத்தி செல்லப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்தி வந்த நபர்கள் பூசை வேளையில் தேவாலயத்துக்கு வெளியேயும், உள்ளேயும் கண் மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்கள். தாக்குதலில் காயமடைந்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை இதுவரையும் வெளியிடப்படவில்லை.
நைஜீரியாவில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் ஒன்றுக்குள் சென்ற நபர் பெரும் தொகையான பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரண்டு பாதிரியார்கள் இன்னுமொரு பகுதியில் கடத்தி செல்லப்பட்டனர். அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மார்ச் மாதம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன், பலர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இவ்வாறு நடைபெற்று வரும் சம்பவங்களினால் அதிருப்தியடைந்துள்ளதாக நைஜீரியா ஜனாதிபதி முஹமட் புகாரி தெரிவித்துள்ளார்.
