அரச உத்தியோகத்தர்களுக்கு பாதிப்பின்றி 5 வருட விடுமுறை

அரச உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு பெற்று செல்வதற்கு, கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சம்பளமின்றிய ஐந்து வருட விடுமுறைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடுமுறை எடுத்துக்கொள்வதனால் சிரேஷ்டத்துவத்துக்கோ, ஓய்வூதியத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடியின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் வழங்கவே பணமின்றி தடுமாறி வரும் நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அரச அலுவலகர்களுக்கு ஏற்படுத்தவே இந்த முடிவினை எடுத்துள்ளது.
சிரேஷ்டத்துவ, மற்றும் ஓய்வூதியங்களில் பாதிப்பு ஏற்படுமென்ற காரணத்தினால் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை அரா அலுவலர்கள் பெற விரும்புவதில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு பணியாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வருமானமும் இந்த வருடம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் 304 மில்லியன் டொலரும், ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியன் டொலருமே கிடைத்துள்ளன. மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. போக போக வெளிநாட்டு வருமானம் வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 460.1 மில்லியன் டொலர் வீழ்ச்சியாக இது காணப்படுகிறது.

கடந்த 10 வருடங்களில் இலங்கையின் வெளிநாட்டு வருமானம் இந்த வருடமே மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 5.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு வருமானமே கடந்த ஒரு வருடத்தில் கிடைத்துள்ளதாகவும், இது 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 23 சதவீத வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் ஏராளமாக காணப்படுவதாகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்குமெனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தாதியருக்கான வேலை வாய்ப்புகள் உடனடியாக காணப்படுவதாகவும் அவர் மேலும் மக்களுக்கு அறிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு பாதிப்பின்றி 5 வருட விடுமுறை

Social Share

Leave a Reply