ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் “த ஹிந்து” தெரிவித்துள்ளது. உயர் மட்ட அதிகாரி ஒருவர் மூலமாக தமக்கு இந்த தகவல் கிடைத்துள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியிட்டதும் வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்கிறார். அவர் ஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க இரட்டை பிராஜா உரிமையினை இரத்து செய்தார். அதன் காரணமாக தற்போது அமெரிக்கா பயணிப்பதற்கு சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்த போதும் அமெரிக்காவினால் அது நிராகரிக்கப்பட்டதாக” செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எங்கே என்ற கேள்வியினை எழுப்பியுள்ள த ஹிந்து, AFP செய்தி சேவை வெளியிட்டுள்ள இலங்கையில்தான் ஜனாதிபதி இருக்கிறார் என்ற செய்தியினையும் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விமானம் ஒன்றில் இந்தியா செல்வதற்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும், அதனை இந்தியா அரசாங்கம் மறுத்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் த ஹிந்து அது தொடர்பில் செய்திகள் எதனையும் வெளியிடவில்லை.
