போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றி வைத்திருப்பது சட்ட விரோதமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உடனடியாக ஜனாதிபதி செயலகத்தை விட்டு அவர்கள் வெளியேற வேண்டுமெனவும், இல்லாவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையினை கைப்பற்றிய போராட்ட காரர்கள் அதன் பின்னர் ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பிரதமர் செயலகம் போன்ற இடங்களை கைப்பற்றினார்கள். பலரது கோரிக்கைகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் எச்சரிக்கையினை தொடர்ந்து அவர்கள் ஜனாதிபதி செயலகம் தவிர்ந்த மற்றைய இடங்களிலிருந்து வெளியேறினார்கள்.
பதில் ஜனாதிபாதியாகவிருந்த ரணில் விக்ரமசிங்க பதவி விலகினாலேயே தாம் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட காரர்கள் அறிவித்திருந்தனர். இவ்வாறான நிலையில் நேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அவர் பதவி விலகவேண்டுமென அவர் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
தங்களது கோரிக்கைகளின் படி ஆட்சியாளர்கள் நடக்காதவிடத்து தாம் அவற்றுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.