இந்தியா அடுத்த இரண்டு மாதங்களில் 8 தொடக்கம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தில் ரஸ்சியா மற்றும் இலங்கையுடன் ஈடுபடவுள்ளதாக இந்தியா வர்த்தக செயலாளர் B.V.R. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ரூபாயில் வர்த்தக நடவடிக்கைககளில் ஈடுபட இந்திய மத்திய வங்கி கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக பகுதியளவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு ரூபாய்களில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இதன் காரணமாக ரஸ்சியா மற்றும் தென் ஆசிய நாடுகளுடன் ரூபாய்களில் வர்த்தகத்தில் ஈடுபடமுடியும்.
எதிர்பார்க்கப்படும் 8 – 9 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தகத்தில் இலங்கை மற்றும் ரஸ்சியா நாடுகளுக்கு எவ்வாறான தொகைகளில் வர்த்தகம் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்படவில்லை.
ரஸ்சியா – யுக்ரைன் போர் காரணமாக இந்தியா இறக்குமதி செய்யும் எரிபொருள் தயாரிப்பு எண்ணை விலை சடுதியாக அதிகரித்தது. அதேவேளை இந்தியாவின் ஏற்றுமதி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்த புதிய திட்டம் விலையேற்றத்தினை கட்டுப்படுத்தும் அதேவேளை விலை வாசிகளை குறைக்க வாய்ப்புகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.
யுக்ரைன் போரை ரஸ்சியா ஆர்மபித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பொருளாதர தடைக்கு இந்தியா ஆதரவு வழங்கவில்லை. ரஸ்சியாவுடன் இந்தியா தொடர்ந்தும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. விநியோகங்களை திடீரென நிறுத்தினால் விலையேற்றங்கள் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் எனும் கொள்கையில் இந்தியாவுள்ளது.
இலங்கை டொலர் தட்டுப்பாடு காரணமாகவே பொருட்கள் கொள்வனவில் சிக்கலை எதிர்நோக்கி வருகிறது. இந்த நடைமுறை இந்தியாவினால் அமுல் செய்யப்பட்டால் இலங்கை இந்தியாவிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வது மிகவும் இலகுபடுத்தப்படும். இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் எரிபொருள் கொள்வனவுக்கான வாய்ப்புகளும் ஏற்படலாம்.
