எகிப்து, தலைநகரம் கைரோவில் இன்று(14.08) ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் ஒன்றினுள் ஏற்பட்ட தீ கசிவு பாரிய தீயாக பரவிய விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அபு சிபின் தேவாலயத்தினுள் தீ ஏற்பட்டமைக்கான காரணம் அறியப்படவில்லை. இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
எகிப்து ஜனாதிபதி சகல சேவைகளுக்கும் உரிய நடவடிக்கைளை உடனடியாக எடுக்குமாறு அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளின் மிக பெரிய கிறிஸ்தவ சமூகமான கொப்ட்ஸ் இன மக்கள் வாழும் பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 103 மில்லியன் மக்கள் தொகையில் 10 மில்லியன் மக்கள் இந்த இன மக்களாக எகிப்தில் காணப்படுகின்றனர்.
இவர்கள் இஸ்லாமிய ஆதிக்கத்துக்கு உட்பட்டு வருவதாகவும், இறுதிக்கிரியைகள் செய்வதிலும் சிக்கல் நிலைகளை எதிர்கொள்வதாக சரவதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி மொஹமட் மொர்சி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தேவாலயங்கள், வீடுகள், பாடசாலைகள் என்பன தீ மூட்டப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு எகிப்தில் தொடர்ந்தும் அதிகளவிலான தீ விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.