ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியின் சிறைக்குள் அகப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பாரளுமன்றத்தை கலைத்து ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாதெனவும் 2025 ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கத்தின் காலம் முடிவடையும் வரை பாராளுமன்றம் தொடருமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும், பாரளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும், பொதுஜன பெரமுனவுக்குமான ஒப்பந்தம்(டீல்) நாட்டில் ஏற்பட்டுள்ள 22 மில்லியன் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து வைக்காது எனவும், பொருளாதரத்தை மீட்டெடுத்தல், அரசியல், சமூக ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் இல்லையெனவும் அவை மேலும் மோசமடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே சர்வதேச நிதி நிறுவனங்களான சர்வதேச நாணய நிதியம், உலக வாங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், கடன் மற்றும் உதவி வழங்கும் நாடுகளான இந்தியா, சீனா, அமெரிக்க போன்ற நாடுகளது நிதி உதவிகள் உதவிகள் கிடைப்பது சந்தேகம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கம் அல்லது அனைத்து கட்சி அரசாங்கம் அமைப்பதில் தீர்க்கமான எந்த முடிவுகளுமின்றி எந்த பாதையுமின்றி இருட்டில் நிற்பது போன்ற நிலைமையே காணப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் இரண்டு திட்ட அறிக்கைகளை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது முன் வைத்தோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு போதும் ஆதரவளிக்காது என கூறியுள்ள தயாசிறி,
இலங்கை மற்றும் சர்வதேச சமூகங்கள், நிதி நிறுவனங்களின் நன்மதிப்பை பெற, போராட்டக்காரர்கள் கோரியது போன்று இலங்கைக்கு மாற்றம் ஒன்று புதிய அரசாங்கத்தினூடாக தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.