மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம்(கசிப்பு) ஆகிய சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகியோர் இன்று(18.08) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் நீதவான் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக காணப்பட்ட பொருட்களை கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளியும் இணைந்து திருடியுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை(18.08) காலை விரைந்து செயல்பட்ட மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் காவலாளி தங்குமிட பகுதியை சோதனையிட்டுள்ளனர். இதன் பொது திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.