-ஷார்ஜாவிலிருந்து விமல்-
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்பபடி இரவு 7.30(ஷார்ஜா 6.00) இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.
ஷார்ஜா என்றதும் எங்களது மைதானம் என்ற எண்ணம் வந்திடும். இலங்கை அணி ஏராளாமான போட்டிகளில் இங்கு விளையாடியுள்ளது. வெற்றி பெற்றுமுள்ளது. ஆனால் அண்மைக்காலத்தில் இது மிகவும் குறைந்து போனது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இது சொந்த மைதானம் என்றே சொல்ல வேண்டும். இதுவரையில் 14, 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இது அவர்களுக்கு பெரிய பலம். இலங்கை அணி 4, 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளது. கடந்த வருடம் உலக கிண்ண 20-20 தொடரில் இலங்கை அணி விளையாடியது அனுபவத்தினை வழங்கியுள்ளது.
மைதானம், மைதானத்தின் ரசிகர்கள் அதிகளவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆதரவினை வழங்குவார்கள். ஷார்ஜா பகுதியிலும் அதிகமான இலங்கையர்கள் வாழ்கின்றர். அதன் காரணமாக இலங்கை ரசிர்கர்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
மிகவும் போராட்டத்துக்கு மத்தியில் இலங்கை அணி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. முதல் போட்டியின் மோசமான தோல்வி இலங்கை அணியின் தலைவர் மற்றும் வீரர்களை மனதளவில் பாதித்திருந்தது. ஆனால் பங்களாதேஷ் அணியுடனான வெற்றி இலங்கைக்கு புதிய தென்பையும், மன உறுதியையும் வழங்கியுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணி இறுதிப் போட்டி செல்லக்கூடிய வாய்ப்புகளை பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. சுப்பர் 04 குழுவுக்குள் தற்போது பலம் குறைந்த அணியாக இலங்கை அணியே காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இலங்கை அணி போராடக்கூடிய நிலை ஒன்றை பெற்று விடும். அதன் பின்னர் பாகிஸ்தான், இந்தியா அணிகளுடன் போராடும் நிலையினை உருவாக்கலாம்.
இரு அணிகளும் மாற்றங்களின்றி விளையாடும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. இலங்கை அணி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஷார்ஜா மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதக தன்மையினை தருவதனால், தனஞ்செய டி சில்வாவினை அணிக்குள் கொண்டு வருவது மேலதிக பலமாக அமையும்.
துடுப்பாட்டம், சுழற்பந்து வீச்சு என இரண்டு பக்கமாக முழுமை பலனை பெறலாம். தஸூன் சாணக்க மித வேகப்பந்து வீசக்கூடியவராக அணிக்குள் இருப்பதனால் வேகப்பந்து வீசக் கூடிய ஒருவரை மாற்றம் செய்யலாம். ஆனாலும் வெற்றி அணியினை மாற்றம் செய்ய அணி விரும்புமா என்ற நிலையும் காணப்படுகிறது.
அணி எவ்வாறு அமைந்தாலும் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி இன்று சவால்களை வழங்கும் என்றே எதிர்பார்க்கலாம். போட்டி அமைப்பு முறையில் ஒரு சிக்கல் நிலை காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணி தான் விளையாடத அணிகளுடன் இன்று விளையாடியிருக்க வேண்டும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியினை டுபாயில் நடாத்துவதன் மூலம் அதிக வருமானத்தை பெறும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான வர்த்தக நோக்கங்கள் விளையாட்டின் சமநிலை தன்மையினை உடைக்கத்தான் செய்கின்றன.
ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் அசுரர பலமாக தென்படுகிறது. டுபாய் போட்டியில் வேகப்பந்து வீச்சு. ஷார்ஜா மைதானத்தில் சுழற் பந்துவீச்சு. அந்த பலத்தை இன்று காட்டினாள் இலங்கை அணி தடுமாறும். இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதனை சரியாக எதிர்கொண்டால் வெற்றி பெறுவது இலகுவாகிவிடும். ஆரம்பம் என்பது மிக முக்கியம். வேகம், சூழல் கலந்த கலவையாக ஆப்கானிஸ்தான் அணி காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் அதிரடியாகவே அமைந்திருந்தது. நிதானம் கலந்த அதிரடி முன்வரிசையில் பலமாக காணப்படுகிறது. அதனை இலங்கை பந்துவீச்சாளர்கள் உடைக்க வேண்டும். அது அவ்வளவு இலகுவான விடயமல்ல. பங்களாதேஷ் அணியுடனும் துடுப்பாட்டத்தில் இறுதிவரை பலமாகவே ஆப்கானிஸ்தான் அணி காணப்பட்டது. பங்களாதேஷ் போட்டியிலும் விக்கெட்களை உடைத்த போதும் ஓட்டங்களை வழங்கினர். ஆப்கானிஸ்தான் போட்டியிலும் அதுவே நடைபெற்றது. ஆகவே பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்த போறதா வேண்டும்.
இந்த தொடரில் சம பல அணிகளாக கருத முடியாத நிலை காணப்படுகிறது. ஆபாகனிஸ்தான் அணி சகலவிதத்திலும் முன்னிலையில் காணப்படுகிறது. அதனை உடைத்து இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் அது சாத்தியமா?