இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (20.09) மொஹாலியில் நடைபெற்ற முதற் 20-20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் அவுஸ்திரேலியா அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
விறு விறுப்பான இந்தப் போட்டியில் வெற்றி இலக்கான 209 ஓட்டங்களை துரத்தியடித்து வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா அணி. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 208 ஓட்டங்களை பெற்றபோதும் அவுஸ்திரேலியா அணியினை கட்டுப்படுத்த இயலவில்லை.
அவுஸ்திரேலியா அணியின் சிறந்த ஆரம்பமும், பின்னர் நிறைவு செய்தமையுமே வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. அவுஸ்திரேலியா அணியின் மத்திய வரிசை ஆட்டம் காண இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடிய மத்தியூ வேட் வெற்றி வாய்ப்பை அவுஸ்திரேலியா பக்கமாக மாற்றினார்.
இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ரோஹித் சர்மா, கோலி ஆகிய இருவருமே வேகமாக ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையினை லோகேஷ் ராகுல், சூரியகுமார் யாதவ உயர்த்தினர். ராகுல் 55 ஓட்டங்களையும், யாதவ் 46 ஓட்டங்களையும் பெற்றனர். அதிரடியாக துடுப்பாடிய ஹார்டிக் பாண்டயா 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் நேதன் எல்லியஸ் 3விக்கெட்களையும், கமரூன் க்ரீன் 2 விக்கெட்களையும், கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. அதன் காரணமாகவே வெற்றியினை நோக்கி நகர முடிந்தது. கமரூன் க்ரீன் 30 பந்துகளில் 61 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். ஸ்டிபன் ஸ்மித் அவருடன் இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி 35 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டு அவுஸ்திரேலியா அணி தடுமாறியது.
பின் மத்திய வரிசையின் சராசரியான அதிரடி துடுப்பாட்டங்களும், மத்தியூ வேட்டின் ஆட்டமிழக்காத 45(21) ஓட்டங்களும் 4 விக்கெட்களினாலான வெற்றியினை இந்தியா அணிக்கு பெற்றுக் கொடுத்தது. இந்தியா அணியின் பந்துவீச்சில் அக்ஷர் பட்டேல் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்களை கைப்பற்றினார். உபாதையிலிருந்து மீண்ட ஹர்ஷல் பட்டேல் அதிகமான ஓட்டங்களை வழங்கினார். புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சிலும் அதிக ஓட்டங்கள் வழங்கப்பட்டமை இந்தியா அணிக்கு சிக்கல் நிலையினை உருவாக்கியது.
ஆசிய கிண்ணத்தில் ஏற்பட்ட இந்தியா அணியின் தோல்விகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. உலக கிண்ண தொடருக்கு அணியினை தயார் செய்யும் செயப்பாடுகளில் இந்தியா அணி ஈடுபட்டு வரும் நிலையில் சுழற்பந்து சகலதுறை வீரருக்கான இடம், மத்திய வரிசையில் இடதுகர துடுப்பாட்ட வீரருக்கான இடம் என்பன சிக்கல் நிலையினை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடர் நிறைவடைவதற்கு முன்னர் இந்தியா அணி தன்னை தயார் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகிறது. இரண்டு மூன்று அணிகளை தயார் செய்ய கூடிய நிலையில் காணப்படும் இந்தியா அணி தற்போது திடீரென தோல்விகளை நோக்கி செல்வது உலக கிண்ணத்தில் அவர்கள் மீதான அவ நம்பிக்கையினை ஏற்படுத்துவதாக அமைகிறது.