இலங்கையின் மோசமான பொருளாதார நிலையினை காரணமாக கூறி படகு மூலமாக தமிழகத்துக்கு சென்றவர்களில் இருவர் இலங்கையின் பல குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர்களாக இனம் காணப்பட்டதோடு அவர்கள் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி படகு மூலமாக தமிழகம் தனுஸ்கோடி சென்று கடலோர காவற்துறையினரால் மீட்க்கப்பட்டு மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் இருவர் இவ்வாறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
கொள்ளை, கொலை, ஆட்கடத்தல், போன்ற குற்ற செயல்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களேஇவ்வாறு கைதாகியுள்ளனர்.
கிளிநொச்சி பிரபல நகை கடையில் திருட்டில் ஈடுபட்டவராக இனம் காணப்பட்ட நபர் இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக இலங்கை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. குறித்த நபர் கொலை மற்றும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் பிணையில் விடுதலையாகியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொருவரான கிருபாகரன் எனும் நபர் கொலை குற்றச்சாட்டில் தேடப்படும் நபர் என இனம் காணப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு தரப்பு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுளளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.