மகளிர் ஆசிய கிண்ண அரை இறுதி அணிகள்

இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையில் இன்று (11.10) சைல்ஹெட்டில் முதற் போட்டியாக நடைபெற்றது. இலங்கை அணி இந்த போட்டியில் தோல்வியடைந்தது. தோல்வியடைந்த போதும் இலங்கை அணி ஏற்கனவே அரை இறுதிக்கு தெரிவாகியிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றால் துடுப்பாட்டத்தை மாத்திரம் தெரிவு செய்யும்.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றது. இதில் ஓஷதி ரணசிங்க 26 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஒமைமா சொஹைல் 5 விக்கெட்களையும், டுபா ஹசான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. இதில் நிதா தார் 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி இரண்டு விக்கெட்டைகளை கைப்பற்றினார்.

முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அரை இறுதி அணிகள் நான்கும் தெரிவாகியுள்ளன.

மழை காரணமாக பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளது போட்டி கைவிடப்பட்டு ஒவ்வொரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன. இதன் காரணமாக ஐந்தாமிடத்தை பெற்ற போட்டிகளை நடாத்தும் நடப்பு சம்பியனான பங்களாதேஷ் அரை இறுதி வாய்ப்பினை இழந்துள்ளது.

முதலிடத்தை பெற்றுக்கொண்ட இந்தியா அணி நான்காமிடத்தை பெற்றுக்கொண்ட தாய்லாந்து அணியினை 13 ஆம் திகதி முதற் போட்டியிலும், இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் அணி மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட இலங்கை அணியினை இரண்டாவது போட்டியிலும் எதிர்கொள்ளவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகளும் ஆசிய கிண்ண தொடரில் அரை இறுதிக்கு முன்னதாக வெளியேறியதில்லை. இதேவேளை பங்களாதேஷ் அணி முதற் தடவையாக இம்முறை அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

இலங்கை அணி 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகவில்லை. இன்றைய பாகிஸ்தான் அணியின் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில் இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் அணியினை எதிர்கொள்ள நிலையில் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும்.

Social Share

Leave a Reply