காற்பந்து உலககிண்ண தொடரின் குழு F இலிருந்து பெல்ஜியம் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த வெளியேற்றம் இந்த உலக கிண்ணத்தின் முதல் அதிர்ச்சி வெளியேற்றமாக கணிக்கப்படுகிறது.
கடந்த உலக கிண்ண தொடரின் மூன்றாமிட அணி, தரப்படுத்தல்களில் இரண்டாமிடத்தில் காணப்படும் அணி முதல் சுற்றோடு வெளியேறியது அதிர்ச்சியாகவே கருத வேண்டும்.
உலக கிண்ண தொடரை சிறப்பாக ஆரம்பித்து கனடா அணியுடன் வென்றவர்கள், மொரோக்கோ அணியுடன் தோல்வியடைந்த நிலையில் இரண்டாம் சுற்று வாய்ப்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது. குழு நிலையில் மூன்றாமிடத்தை பெற்று வெளியேறினார்கள்.
மொரோக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை வெற்றி பெற்று, குரேஷியா அணியுடன் சமநிலை முடிவினை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதற் தடவையாகவும் இரண்டாம் தடவையாகவும் முன்னோடி காலிறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது ஆபிரிக்கா வலய மொரோக்கோ அணி.
மொரோக்கோ மற்றும் கனடா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 2-1 என மொரோக்கோ அணி வெற்றி பெற்றது. ஒரு உலககிண்ணத்தில் இம்முறையே மொரோக்கோ அணி இரன்டு வெற்றிகளை பெற்றுள்ளது. உலக கிண்ண தொடர்களில் இது அவர்களுடைய நான்காவது வெற்றியாகும்.
மொரோக்கோ அணி வெற்றி பெற்றால் நிச்சயம் அடுத்த சுற்று என்ற நிலையில் போட்டி ஆரம்பித்தது முதல் மொரோக்கோ அணி கனடா அணிக்கெதிராக சிறப்பாக விளையாடியது. நான்காவது நிமிடத்தில் ஹகிம் சியேச் அடித்த கோல் மூலமாக முன்னிலை பெற்றது. தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய மொரோக்கோ அணி 23 ஆவது நிமிடத்தில் யூசெப் என் நெஸ்ரி இன் மூலமாக பலமான முன்னிலையினை பெற்றது.
40 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் சொந்த கோல் மூலமாக கனடா அணி முதல் கோலை பெற்றுக் கொண்டது.
குரேஷியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான போட்டி கோல்களின்றி சமநிலையில் நிறைவடைந்த நிலையில் குரேஷியா அணி இரண்டாம் இடத்தை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது. கடந்த உலககிண்ண தொடரின் இரண்டாமிட அணி குழு நிலையில் இரண்டாமிடத்தை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாவது கூட அதிர்ச்சி முடிவே.
இரு அணிகளுக்குமிடையிலான போட்டி மிகவும் போராட்டமாக அமைந்தது. பெல்ஜியம் அணி அதிகமாக கோல்களை பெற முயற்சித்த அதேவேளை சில கோல் வாய்ப்புகளும் அவர்களிடமிருந்து நழுவி போனது தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
1 | மொரோக்கோ | 03 | 02 | 00 | 01 | 07 | 03 | 04 | 01 |
2 | குரேஷியா | 03 | 01 | 00 | 02 | 05 | 03 | 04 | 01 |
3 | பெல்ஜியம் | 03 | 01 | 02 | 00 | 03 | -01 | 01 | 02 |
4 | கனடா | 03 | 00 | 03 | 00 | 00 | -05 | 02 | 07 |