மகன் திருடிய தங்க நகையை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்று கொடுத்த தாய் மற்றும் நகையை திருடிய அவரது மகன், மேலும் அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்மிமன கெசல்கஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய தாய், அவரது 22 வயது மகன் மற்றும் அவரது மகனின் நண்பர்களான 23 மற்றும் 28 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி தனது பிள்ளையை பயிற்சி வகுப்புக்கு அழைத்து வந்து மீண்டும் வீடு திரும்புவதற்காக வக்வெல்ல வீதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்ற தாய் ஒருவரிடமிருந்து இந்த நகையை குறித்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்றுள்ளனர்.
தமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தி நகையை பறித்த நபரை கைது செய்தனர். விசாரணையின்போது நகையை திருடிய நபரின் தாய் நகையை வங்கியில் அடகு வைத்து 61500 ரூபாயை பெற்றுக்கொண்டு 5000 ரூபாவை தன்னிடம் வைத்துக்கொண்டு மீதியை மகனுக்கு கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையில், சந்தேகநபர் ஹெரோயின் தருவதாக கூறி மஹமோதர பிரதேசத்தில் உள்ள ஒருவரிடமிருந்து 700,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், எனினும் குறித்த ஹெரோயின் தொகையை திட்டமிட்டபடி வழங்க முடியாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது.
பின்னர், மஹமோதரைச் சேர்ந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் நகையை கொள்ளையடித்து பணம் கொடுக்க ஏற்பாடு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.