டினேஷ் சாப்டர் கொலை – வியாபரா பங்காளர்களிடமும் விசாரணை

அண்மையில் கொழும்பில், கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து துரித கதியில் இடம்பெற்று வருகிறது. தொலைபேசி தகவல்களை அடிப்படையாக வைத்து பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு அவரின் வியாபரங்கள், வியாபார பங்காளர்கள் தொடர்பிலும் பொலிஸ் ஆழமாக விசாரணைகள் செய்து வருகின்றது.

டினேஷ் சாப்டரின் மனைவி அடங்கலாக அவரின் நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய வியாபார பங்காளர்களிடமும் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்து வருகின்றது. இருப்பினும் இதுவரையில் சந்தேகத்துக்குரிய முறையில் எந்தவித ஆதரங்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் இதுவரை 41 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பொரளை பொலிஸார் 8 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துளளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சில தனி நபர்களது தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான விபரங்களை பெறுவதற்கு நீதி மன்றத்திடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளதாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதோடு பொலிஸார் அதனை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்த தல்துவ, நீதிமன்ற அனுமதியின்றியும் குறித்த தகவல்களை பெற முடியுமெனவும் கூறியுள்ளார்.

பல அணிகள் வேறு வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் சந்தேகத்துக்குரிய முறையில் எவரையும் அடையாளம் காண முடியவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விளையாட்டு வர்ணனனையாளரும், இலங்கை கிரிக்கெட் முன்னாள் ஊடக முகாமையாளருமான பிரைன் தோமஸுக்கு டினேஷ் சாப்டர் அவரை சந்திக்க வருமாறு குறும் செய்தி அனுப்பியதும், அவரை சந்திக்க செல்வதாக கூறிவிட்டு டினேஷ் சென்றதாகவும் வாக்கு மூலங்கள் வழங்கப்பட்ட நிலையில்
அவர் மீது சந்தேகங்கள் எழும்பிய போதும், அந்த கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அவருக்கு தொடர்பு இருப்பது தொடர்பிலும் எந்தவித ஆதாரங்களும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

டினேஷ் சாப்டரின் நெருக்கமானவர்களினாலே இந்த கொலை செய்யப்பட்டுள்ளது என ஊடங்கள் மூலமாக ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான எந்தவித ஆதரங்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டினேஷ் சாப்டரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்துக்கும் அவரது செயலாளர் வழங்கிய வாக்குமூலத்துக்கும் வித்தியாசங்கள் பல இருப்பதாக வெளியாகிய தகவல் தொடர்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் “அவ்வாறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் அவை ஊடகங்களுக்கு வழங்கப்படாது. நேரடியாக அவை நீதிமன்றத்துக்கு வழங்கப்படும்” என கூறியுள்ளார்.

டினேஷ் சாப்டரின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அவர் மெய் பாதுகாவலர்களின்றி வழமையாக செல்லுமிடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளை அவர் மரணித்த நாளன்று, பொரளை பொது மயானத்துக்கு செல்வதற்கு முன்னர் சிற்றுண்டிகள் வாங்க சென்றுள்ளார். அந்த உணவகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply