நிதி உத்தரவாதத்தை அளிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா உறுதியாக நம்புவதாகவும் அதனால் ஏனைய தரப்புகளைப் பற்றி பாராமல் சரியானவை என தான் நினைக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று  (20.01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இணைந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சவாலை வெற்றிகொள்ளுமென இந்தியா நம்புவதுடன் இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையின் நம்பிக்கை மிகுந்த நண்பராக இந்தியா இருக்குமென்றும் அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்பதற்கு இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெகு விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நம்பகமான அண்டைய நாடு மற்றும் நம்பகமான பங்காளி என்ற அடிப்படையில் இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் மீட்சிக்காக பல மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயசங்கர்
கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளாக விளங்கும் வலுசக்தி, சுற்றுலாக் கைத்தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி போன்றவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்….
நிலைபேண்தகு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய மிகப்பிரமாண்டான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் இலங்கையில் உள்ளது. திருகோணமலையை வலு சக்தி மையமாக மாற்ற முடியும். அத்தகைய நடவடிக்கையை தொடங்குவதற்கு இலங்கையின் நம்பகமான பங்காளியாவதற்கு இந்தியா தயாராக உள்ளது. இந்த ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புக் குறித்தும் இன்று நடைபெற்ற கலந்துரையாடல்களில் உடன்பாடு எட்டப்பட்டது.

இலங்கையில் இதுபோன்ற செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில்
இலங்கையில் சிறந்த வர்த்தக நட்புச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். சட்டம் இயற்றுபவர்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

அந்தவகையில் இன்று இலங்கை எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் வலுசக்தி பாதுகாப்பாகும். எனவே இதுபோன்றதொரு நிலைமையில் எட்டப்படும் தீர்வுகள் பாரிய பிராந்தியங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போதே அதன் முழுமையான பலன் இலங்கைக்கு கிடைக்கும்.சுற்றுலாக் கைத்தொழில் இலங்கைப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகத் திகழும் அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சாதகமான பலனை அடைய முடியும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதே எனது இந்த விஜயத்தின் நோக்கமாகும். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவியாக இந்தியா கடந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியது.

இலங்கையை மீண்டும் மீட்பதற்காக கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா உறுதியாக நம்புகிறது.

இதனால், ஏனைய தரப்புக்களைப் பற்றி பாராமல் தான் சரியென நினைத்ததை செயற்படுத்த இந்தியா தீர்மானித்தது. அதற்கமையவே, இலங்கையை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை நாம் வழங்கினோம்.

நிதி உத்தரவாதத்தை அளிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்!
நிதி உத்தரவாதத்தை அளிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Social Share

Leave a Reply