பென்டோரா பத்திரிகை, அண்மையில் வெளிநாடுகளில் அதிக பணத்தினை பதுக்கி வைத்துள்ளமை மற்றும் அதிக பண பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் அடங்கியஆவணங்களை சர்வதேச ரீதியில் வெளியிட்டிருந்தது.
அந்த பெயர் பட்டியிலில் இலங்கை சார்ந்த திருக்குமார் நடேசன் மற்றும் அனோமா ராஜபக்ச ஆகியோரது பெயர்களும் இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, ஒரு மாத காலத்துக்குள் விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர்கள் மேற்கொண்ட கொடுக்கல வாங்கல்கள் தொடர்பிலேயே விசாரணைகளை நடாத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இது தொடர்பில், ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர அவர்களால், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு, ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் எவ்வாறான பிழையான விடயங்களிலும் ஈடுபாடவில்லை எனவும், குறித்த பத்திரிகையில் வெளிவந்த விடயங்கள் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரணை நடாத்துமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லண்டன் மற்றும் சிட்னியில் உயர்தர தொடர்மாடி வீடுகளை வாங்கும் நிறுவனம் ஒன்றை முகாமைத்துவம் செய்யும், அறக்கட்டளை நிறுவகத்தின் உண்மையான பயனாளிகள் நிருமா ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் என பன்டோரா பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் மைத்துனரின் மகளான நிருபமா ராஜபக்ச, 2010 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அதேவேளை, 3 தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டவர்.