கம்பஹா மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வை வழங்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்னாகொட குடிநீர் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கண்டறிவதற்காக நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று (01.03) அந்த இடத்திற்கு விஜயம் செய்தார்.
2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தை 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கட்டி முடிக்குமாறு இந்த நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு பொறுப்பான சீன நிறுவனத்திடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீன நிதியுதவியுடன் அத்தனகலு ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கம் 5.5 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள 443 கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கு இந்த நீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்க்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.
இதன்போது, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யூ.டி.சி. ஜெயலால், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.பி.திரிமஹாவிதான மற்றும் அதிகாரிகள் சிலரும் விஜயம் செய்திருந்தனர்.





