மீண்டும் அதிகரிக்கும் காற்றுமாசுபாடு!

பத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் நேற்று (12.03) காற்று மாசுபாடு மோசமான அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு அனைவருக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அளவில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனதின் பணிப்பாளர் ஆசிறி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நகரின் காற்றின் தரச் சுட்டெண் 106 ஆகவும், குருநாகல் மற்றும் வவுனியா நகரங்களில் 111 ஆகவும், திருகோணமலையில் 123 ஆகவும், காலியில் 123 ஆகவும், புத்தளத்தில் 117 ஆகவும், பதுளையில் 134, முல்லைத்தீவில் 109, பொலன்னறுவையில் 106 ஆகவும் பதிவாகியுள்ளது.

கண்டி, கேகாலை, நுவரெலியா, மகஸ்தோட்டை, இரத்தினபுரி, கட்டங்கம, எம்பிலிப்பிட்டிய, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் காற்றின் தரம் சாதாரண மட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

101 முதல் 150 வரையிலான காற்றின் தர சுட்டெண் உள்ள பகுதிகளில் வசிக்கும், சுவாச கோளாறு உள்ள மக்களுக்கு இந்நிலை உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும், 151 முதல் 200 வரையிலான காற்றின் தர சுட்டெண் உள்ள பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பாதகமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply