விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில், புத்தளம், அனுராதபுரம், குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் கடந்த 14ம் மற்றும் 15ம் திகதிகளில் ஒருங்கிணைந்த நீர் வழிகள் மற்றும் நீர்வள முகாமைத்துவ திட்டம் மற்றும் காலநிலை தாக்கத்தை குறைப்பதற்கான பல கட்ட வேலைத்திட்டத்தின் திட்ட முன்னுரிமை கூட்டங்கள் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றன.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளத்திற்கு 300 மில்லியன், அனுராதபுரத்திற்கு 450 மில்லியன், குருநாகலுக்கு 300 மில்லியன் மற்றும் கேகாலை மாவட்டத்திற்கு 98 மில்லியன் ருபாய் நிதித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நீர்ப்பாசன முறையை வலுப்படுத்தும் வேலைத்திட்டமும் இதன் மூலம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க பல ஆலோசனைகளை முன்வைத்தார், அவை பின்வருமாறு:
1. இத்திட்டங்கள் மக்களுக்கு பயன்தரும் வகையில் அதிகபட்ச செயல்திறனுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
2. இந்த திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பில் விவசாய அமைப்புகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
3. விவசாயிகள் தங்கள் உழைப்பை ஒருங்கிணைத்து கிராமத்திற்கு அதிக பயன்கள் வரும் வகையில் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.
4. கிராமத்தில் மிக அத்தியாவசியமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கபட வேண்டும்.
5. திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் முன் நீர்ப்பாசன இருப்புக்களை தீர்த்து வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் முடிவடையும் நாள் வரை, திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
7. விவசாய சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், மாவட்டச் செயலகம் போன்ற தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
8. இத்திட்டத்தின் நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாதந்தோறும் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
9. இத்திட்டத்தில் இருந்து மாவட்டங்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை திருப்பி அனுப்ப விடாமல் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் .ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் அதிகாரிகளுடன் இணைந்து ஒரே வேனில் மாவட்டங்களுக்குச் சென்று பார்வையிட்டமையும் விசேட அமசமாகும்.
இந்நிகழ்வில் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


