யாழ்ப்பாணம் கண்டி ஏ-9 பிரதான வீதியில், ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையான முல்லைத்தீவு பிரதான வீதிகளில் காலை வேளைகளில் பஸ்கள் எதுவும் செல்லாததால் பாடசாலை மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் பாடசாலை மாணவர்கள் இருக்கும் பஸ் நிலையங்களில் காலை வேளைகளில் பஸ்ஸை நிறுத்தாது செல்வதால் சில மாணவர்கள் காலை 09 மணிக்கு பாடசாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த நாட்களில் பாடசாலைகளில் ஆண்டு இறுதி பரீட்சைகள் நடைபெறுவதால், இந்த போக்குவரத்து சிக்கல் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதன்காரணமாக முல்லைத்தீவில் பல போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலையிட்டு ஓடும் பஸ்களை நிறுத்தி பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்வதுடன் பஸ் சாரதிகளை எச்சரித்து வருகின்றனர்.
எனினும், சில நாட்கள் பாடசாலை மாணவர்களை பஸ்களில் ஏற்றிச் சென்றாலும், ஒருசில நாட்களின் பின்னர் மீண்டும் அதே நிலை ஏற்படுவதாக பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர், இது தொடர்பில் பல முறை உரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் இது வரையில் தீர்வு வழங்கப்படவில்லை எனவும் பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், பஸ்கள் மாணவர்களை ஏற்றாது பயணிப்பதால், ஏராளமான மாணவர்கள் காலையில் பல மணி நேரம் படிப்பை தவறவிட நேரிடுவதுடன், மாலையில் இரண்டு, மூன்று மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் வீதியை மறித்து பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.