பிட்ஸ் எயார் நிறுவனத்தின் விமானச் சேவை அதிகரிப்பு

இலங்கையின் முதல் தனியார் சர்வதேச விமானச் சேவையான FitsAir, நிறுவனமானது கொழும்பிலிருந்து டுபாய்க்கு தனது விமானங்களின் சேவையினை அதிகரித்துள்ளது. மார்ச் 26 ஆம் திகதி இரண்டு நகரங்களுக்குமிடையில் தினசரி சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாகவும், சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் வாரத்திற்கு 4 முறை விமான சேவையினை அதிகரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபிட்ஸ் ஏவியேஷன், வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அமார் காசிம் கூறுகையில், “கொழும்பிலிருந்து டுபாய் வரையிலான சேவையை அதிகரித்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”. “எங்கள் சேவையின் இந்த மேம்பாடு தடையற்ற இரு நகரங்களுக்குமான இணைப்பை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.”என்று மேலும் கூறியுள்ளார்.

மேலும் இவ் விமான சேவையானது உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான டுபாயை சுற்றி பார்ப்பதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குவதோடு வணிகப் பயணிகள் உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் கொள்வனவு செய்வதற்கும், ஆடம்பரமான தங்குமிடங்கள் மற்றும் சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் உட்பட பலவிதமான விடயங்களை பார்வையிடுவதற்குமான ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

FitsAir விமான சேவை நிறுவனமானது புதிய இலக்கினை அடையும் நோக்கத்தோடு ,சமீபத்தில் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையையும் அறிமுகப்படுத்தியது. 2022 ,ஐப்பசி மாதம் விமானப் பயணிகள் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து விமான நிறுவனம் அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு அதிக பயணத் தெரிவுகள் மற்றும் சிறந்த இணைப்பை வழங்குவதற்கான அதன் சான்றையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றது. போட்டி விலையில் நடைமுறை பயண தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் FitsAir, குறைந்த கட்டண இலங்கை விமான சேவையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் வரவிருக்கும் காலாண்டில், FitsAir நிறுவனமானது மூன்று புதிய சர்வதேச விமான சேவைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது எனவும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

பிட்ஸ் எயார் நிறுவனத்தின் விமானச் சேவை அதிகரிப்பு

Social Share

Leave a Reply