இலங்கை, நியூசிலாந்து போட்டி சுப்பர் ஓவரில் நிறைவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (02.04) ஓக்லாந்தில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. குசல் பெரேரா நீண்ட காலத்திற்கு பின்னர் உபாதைகளிலிருந்து மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. முதலாவது பந்திலேயே பத்தும் நிசங்கவின் விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தாலும் மத்திய வரிசை வீரர்கள் இலங்கை அணிக்கு கைகொடுத்தனர். குசல் பெரேரா தனது மீள் வருகை போட்டியில் அரைச்சதம் அடித்து மீள்வருகையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 67(41) ஓட்டங்களையும், குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53(45) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 25(09) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷாம் 2 விக்கெட்களையும், அடம் மில்ன், பென்ஜமின் லிஸ்டர், ஹென்றி ஷிப்லி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் மத்திய வரிசை வீரர்கள் கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. இதில் டேரில் மிச்செல் 66(44) ஓட்டங்களையும், மார்க் சப்மன் 33(23) ஓட்டங்களையும், டாம் லதாம் 27(16) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரமோத் மதுஷான், தசுன் ஷானக, வனிது ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், டில்ஷான் மதுஷங்க, மஹேஷ் தீக்ஷண ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

போட்டி சமநிலையில் நிறைவடைந்தவுடன் சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 1 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 8 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 0.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டியின் நாயகனாக சரித் அசலங்க தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை, நியூசிலாந்து போட்டி சுப்பர் ஓவரில் நிறைவு

Social Share

Leave a Reply