வவுனியாவில் காணி வழங்கும் திட்டம் 150 குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுப்பதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குணசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஓமந்தை பிரிவில், நீண்டகாலமாக காணி இன்றி இருப்பவர்கள் எழுத்துமூலம் தம்மிடம் கோரிக்கை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக வவுனியா பிரதேசச் செயலாளர் நா.கமலதாசன் அவர்களோடு நேரில் சென்று, காணி வழங்குவதற்கு ஏதுவான இடத்தினை தெரிவு செய்து, காணி கோரிய மக்களையும் அழைத்துச் சென்றதாகவும் திலீபன் மேலும் கூறியுள்ளார்.
பிரதேச செயலாளர், மேலதிக நடவடிக்கையினை எடுத்து காணி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியதாகவும், பூந்தோட்டம் முகாமிலிருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள், இக்காணிக்கருகில் இருப்பதாகவும், காட்டை துப்பரவு செய்ததாக வனவள திணைக்களம் வழக்குப்பதிவு செய்து பல வருடமாக நீதிமன்றம் சென்று வருகின்றனர். இவர்களின் நிலையினையும் பிரதேச செயலாளருக்கு நேரடியாக காண்பித்ததோடு, குறித்த வழக்கினை முடிப்பதற்கு வனவள அதிகாரியோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், காணி வழங்கும் திட்டத்தில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் கூறியுள்ளார்.
