இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் நாள் நிறைவில் அயர்லாந்து அணி 07 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்களை பெற்ற நிலையில் மூன்றாம் நாள் இன்று காலை ஆரம்பித்தது. பிரபாத் ஜெயசூர்யா மேலும் இன்று இரன்டு விக்கெட்களை கைப்பற்ற, ரமேஷ் மென்டிஸ் ஒரு விக்கெட்டினை கைப்பற்ற 143 ஓட்டங்களுடன் அயர்லாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது. பிரபாத் ஜெயசூர்யா 07 விக்கெட்களை கைப்பற்றினார். இது அவரின் ஐந்தாவது ஐந்து விக்கெட் பெறுதியாகும். விஸ்வ பெர்னாண்டோ இண்டு ஆரம்ப விக்கெட்களை ஒரே ஓவரில் கைப்பற்றி அயார்லாந்து அணியை தடுமாற வைத்திருந்தார். அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் மக்கலொம் 35 ஓட்டங்களையும், ஹரி ரெக்டர் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். லோர்கன் ரெக்டர் 45 ஓட்டங்களை பெற்று இன்று ஆட்டமிழந்தார்.
பலோ ஒன் முறையில் அயர்லாந்து அணி தனது இரண்டாம் இன்னிங்ஸை இன்று ஆரம்பித்து இன்றே நிறைவு செய்துள்ளது. இரண்டாம் இன்னிங்சில் அயர்லாந்து அணி ஆட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஹரி ரெக்டர் 42 ஓட்டங்களையும், ஜோர்ஜ் டொக்ரல், கேர்ட்டிஸ் கம்ஹர் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ் 04 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்யா 03 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி திமுத் கருணாரட்ன, குஷல் மென்டிஸ், டினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம ஆகியோரின் சதங்கள் மூலம் 06 விக்கெட்களை இழந்து 591 ஓட்டங்களை பெற்றுள்ளது.
திமுத் கருணாரட்ன மற்றும் நிஷான் மதுசங்க ஆகியோர் 64 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் திமுத் மற்றும் குஷல் இணைந்து அழுத்தங்களின்றி இலகுவாக ஓட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்து சென்றது. இருவரும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 281 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். குஷல் மென்டிஸ் 140 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதனை தொடர்நது மைதானத்துக்கு வருகை தந்த அஞ்சலோ மத்தியூஸ் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.
183 ஓட்டங்களை சதீரசமரவிக்ரம மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோர் 183 ஓட்டங்களை ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.
டிமுத் கருணாரட்ன 179 ஓட்டங்கள் மூலமாக இலங்கை அணிக்காக கூடுதலான டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் அரவிந்த டி சில்வாவை பின் தள்ளி ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் கேர்ட்டிஸ் கம்பர் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். ஜோர்ஜ் டொக்ரல், பென் வைட், மார்க் அடர், அன்டி மக்பிரைன் ஆகியோர்தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
