சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (18.04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது, பல்வேறு தரப்பினரால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது, சீன தனியார் நிறுவனம் ஒன்று இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இது தொடர்பில் யோசனை ஒன்று மட்டுமே முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் விவசாய அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், குரங்குகள் ஏற்றுமதி தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்த நாட்டிலும் விலங்குகளை சுதந்திரமாக பரிமாறிக்கொள்ள முடியாது. சீன அரசு நம்மை விட கடுமையான விதி முறைகளைக் கொண்டுள்ளது. ஊடகங்களில் கூறப்படுவது போல், உயிருள்ள விலங்குகளை உயிருடன் அனுப்பும் இத்தகைய முறையை அரசுகள் ஏற்கவில்லை.”
”மேலும், அரசுகளுக்கிடையே இது போன்ற எந்த கலந்துரையாடலும் நடக்கவில்லை. தனியார் நிறுவனம் ஒன்று இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் ஒரு குழுவாக பரிசீலிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.