நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தரம் 3, 4, 5 இல் கல்வி பயிலும் மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (28.04) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவினை உண்ட மாணவர்கள் மயக்கம், வயிற்று வலி, குமட்டல் , வயிற்றோட்டம், மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு உணவருந்திய மாணவர்களில் சுமார் 31 மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாடசாலை மாணவர்கள் உட்கொண்ட உணவின் மாதிரிகளை பரிசோதனைக்காக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.