அரசின் விரோதப்போக்குகள், பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேதினப்பேரணியில் அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் வன்னிமாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள ஊடகக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியானது மேதின நிகழ்வுகளை வவுனியாவிலும் ஏற்ப்பாடு செய்துள்ளது.மக்களின் பொருளாதார நெருக்கடி ரணில் ஆட்சியின் ஜனநாயக விரோதப்போக்குகள் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் போன்ற ஆட்சியாளர்களின் செயற்ப்பாட்டை கண்டித்து இம்முறை உழைப்பாளர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் கட்சியின் பிரதான ஊர்வலமானது நாளை காலை 9.30 மணிக்கு வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா மாநகரசபை மண்டபத்தை அடையும். காலை 10.45 மணிக்கு நகரமண்டபத்தில் மேதினக்கூட்டம் இடம்பெறும்.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.பகிதரன் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன், வன்னிமாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன், சமூகநீதிக்கான வெகுஜனஅமைப்பின் இணைத்தலைவர் பூ.சந்திரபத்மன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக கே.ஜிந்திசன், தொழிற்சங்கம் சார்பாக க.மகேந்திரன்,பெண்விடுதலைச்சிந்தனை அமைப்பின் சார்பில் சிவந்தினி, ஆகியோர் உரையாற்றுவர்.
குறித்த மேதினக்கூட்டத்திலும் ஊர்வலத்திலும் நண்பர்கள், ஆதரவளார்கள், முற்போக்குசக்திகள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கட்சியின் வன்னிமாவட்ட செயலாளர் நி.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.