இலங்கை கிரிட்கெட் அணி மீது தாக்குதல் நடாத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தவரும், பாகிஸ்தானில் தேடப்பட்டு வரும் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவருமான பாலி ஹயாரா என அழைக்கப்படும் இக்பால் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இக்பால், அல் குவைதா, டெஹரீக் இ தலிபான் பாகிஸ்தான் போன்ற அமைப்புகளில் அங்கத்தவர் எனவும், 26 குறிவைத்து செய்யப்பட்ட தீவிரவாத கொலை சம்பவங்களுக்காக தேடப்பட்டு வருபவர் எனவும் 21 ஷியா முஸ்லிம்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், வேறு 05 குற்றச் செயல்களுக்காகவும் தேடப்பட்டு வந்ததாகவும் பாகிஸ்தானின் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நபரை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்து தருபவர்களுக்கு 10.5 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்படுமெனவும் பொலிஸார் அண்மையில் அறிவித்தல் வழங்கியிருந்தனர். பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய வேளையில் இக்பால் மற்றும் அவரது சகாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ஒன்றுக்காக இலங்கை அணியினர் மைதானத்துக்கு சென்றுகொண்டிருந்த வேளையில் அவர்களது பேரூந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தில் 07 பொலிஸார் கொல்லப்பட்டதோடு இலங்கை வீரர்கள் திலான் சமரவீர, அஜந்த மென்டிஸ் ஆகியோர் பாரிய காயங்களுக்கு உட்பட்டிருந்தனர். இந்த தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் பல கிரிக்கெட் போட்டிகள் அடங்கலாக விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவில்லை. தற்போதே மீண்டும் அவை வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன.