தாம் ஒரு போதும் வன்முறைக்குள் சென்றதில்லை. ஆனால் ராஜபக்ஷவின் ஓடும் நாய்கள் தம் போராட்டக்கார்கள் மீது கைவத்தால் தாம் யாரெனவும், என்ன செய்வோம் எனவும் காட்டுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று(15.05) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் போராட்ட உறுப்பினர்கள் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
அண்மையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட முக்கியமானவர்களில் ஒருவரான பியத் நிகேஷல மீதான தாக்குதல் தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பியத் நிகேஷல மீது தாக்குதல் நடாத்திய கடுவலை முன்னாள் மேயரும் அவரின் அடியாட்களும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்திய போராட்டக்காரர்கள் கடந்த வருடம் மே 09 நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் கடுவலை மேயர் சம்மந்தப்பட்டது தெளிவாக வீடியோ காட்சிகள் மூலம் வெளிவந்த போதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் குற்றம் சுமத்தினார்கள்.
மே 09 போராட்டத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த அரசியல்வாதிகளும், அடியாட்களும் மீண்டும் களத்தில் இறங்கி மக்களை அச்சுறுத்தும் செயதற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக வும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த வருடம் காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என சமூக செயற்பாட்டாளர் ஷஷிக திஸாநாயக்க நேற்றைய போராட்டத்தில் கருத்து வெளியிட்டார். அதன் பின்னர் ஆயுதம் ஏந்திய அடியாட்கள் டிலான் சேனநாயக்கவின் கலையகத்தை உடைத்து கூரிய ஆயுதத்தினால் அவர் தாக்கப்பட்டார். ஆனால் விசாரணைகள் உரிய முறையில் நடாத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்தின் போதோ அல்லது அதன் பின்னரோ தாம் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடவில்லை எனவும், அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் போராட்ட அங்கத்தவர் மனோஜ் முதலிகே கூறினார்.
நாட்டுப்புற உணவுகள் மூலம் வளர்ந்த கிராமப்புற இளைஞர்கள் நாம். இனிமேல் எம்மீது ஒரு விரலை வைத்து பாருங்கள். நாங்கள் என்ன செய்வோம் என காண்பிப்போம். முழு இலங்கையையும் வீதிகளில் இறக்குவோம் எனவும் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்ட அங்கத்தவர்கள் போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட கருத்துக்கு போராட்ட அங்கத்தவர் மொஹமட் ருஸ்தி பதில் கருத்து வெளியிட்டுள்ளார். போதைவஸ்து தொடர்பில் போதை தடுப்பு பொலிஸாரினால் ஒரு விடுதி சோதனையிடப்பட்ட போது கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்கு உலங்கு வானூர்தி மூலம் ஓடிச்சென்று பொதுவெளியில் அந்த நபரை அரவணைத்தது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.