வவுனியா – பாரதிபுரம் பகுதியில், அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நலன்புரி உதவி திட்ட கொடுப்பனவுகளில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நலன்புரி உதவிதிட்ட கொடுப்பனவுகள் பெயர் பட்டியலில், தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள், உட்பட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை எனவும், மாறாக வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தின் முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகினர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது; பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடிய திலீபன், பெயர் விபரம் வராதவர்களிள் முறைப்பாட்டு கடிதங்களை எழுதி பிரதேச செயலாளரிடம் கையளிப்பதுடன் தன்னிடமும் பிரதியொன்றை தருமாறு தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுக்கூடிய மக்கள் கலைந்து சென்றனர்.
