வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (24.06) முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின்போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதுடன், மக்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக ‘பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள், உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா, படுகொலை எங்கே நடந்தது?, எங்களுடைய நாட்டில் கை போடாதே என கோசங்கள் எழுப்பினர்.

அத்துடன், ‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.