புதிய நலன்புரித் திட்டம் வறிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேன் முறையீடு எவ்வளவு தூரம் சாதகமானதாக அமையும் எனவும் இலங்கை சமூக நடவடிக்கை மன்றத்தின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு அரங்கில் நேற்று (28.06) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவ் அமைப்பின் பிரதிநிதி தவரூபன் நிசாந்தினி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘எமது அம்மாவும் சமுர்த்தி பயனாளியாக இருக்கிறார். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கியூ ஆர் முறை ஒரு பிழையான முறையாகும்.
வறுமையான மக்களுக்கு கியூ ஆர் வெட்டப்பட்டு வசதியான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் ஏசி பூட்டியவர்கள், மாபிள் பதித்தவர்கள், மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கியூ ஆர் கிடைத்திருக்கிறது.
ஆனால் வறிய மக்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. இது ஒரு குற்றச் செயல். வறிய மக்களுக்கு இதை கொடுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த கியூ முறையை நிறுத்துங்கள்’ எனத் தெரிவித்தார்.
இதேவேளை இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை சமூக நடவடிக்கை மன்றத்தின் வவுனியா இணைப்பாளர் எஸ்.சுலோஜினி கருத்து தெரிவிக்கையில், வறிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட சமுர்த்தி திட்டம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் வறுமைக் கோட்டின் கீழ் இருந்த மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த சமுர்த்தி நலன்புரி திட்டத்தின் பேரில் பறிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் குறித்த மன்றத்தின் பிரதிநிதி கிரிஸ்நோபேட் மௌசுமி கருத்து தெரிவிக்கையில், ‘எமது மக்களுக்கு நடந்துள்ள அநீதி தான் புதிய நலன்புரித் திட்டம். மேன் முறையீடு செய்யுமாறு கோரப்பட்டுள்ள போதும் அது எவ்வளவு தூரம் சரியானதாக நடக்கும் என நம்ப முடியாது. இதனால் இதனை இடை நிறுத்தி புதிய திட்டத்தை வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்காக கொண்டு வர வேண்டும்’ எனக் கூறினார்.