மதங்களை இழுவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை, பண மோசடி போன்ற குற்றங்களுக்காக விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்படவுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று(06.07) இங்கிலாந்து சென்றுள்ளதாக இலங்கையின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நெருக்கமானவர் தமது ஊடகத்துக்கு இந்த தகவலை வழங்கியதாகவும், சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லவுள்ளதாகவும் குறித்த நபர் தகவல் வழங்கியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஜெரோம் பெர்னாண்டோவின் சமூக வலைத்தளம் ஊடாக நேற்று 06 ஆம் திகதி இங்கிலாந்தில் போதனையில் ஈடுபபடவுள்ளதாக தகவல் பரிமாறப்பட்டுள்ளது. அதன்படி அவர் இங்கிலாந்துக்கு ஏற்கவனே சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற போதனை ஒன்றில் பௌத்தம், இந்து, முஸ்லீம் மதங்களை அவதூறாக பேசி போதனையில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தி பல அமைப்புகள் அவரை கைது செய்யுமாறு கோரி புகார் செய்துள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்ய நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு கையளித்துள்ளனர். ஜெரோம் பெர்ணாண்டோ நாடு திரும்பும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார்.
தான் வெளியிடட கருத்துக்களுக்கு ஜெரோம் பெர்னாண்டோ வீடியோ மூலம் மன்னிப்பு கோரியிருந்தார். அத்தோடு குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்வதனை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போதும் பின்னர் அந்த மனு மீளப்பெறப்பட்டது.