உலகக்கிண்ண தெரிவுகாண் தொடரை வென்றது இலங்கை

சிம்பாவேயில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணியை 128 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் தோல்விகளின்றி 8 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளின் மூலம் இலங்கை அணி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றுள்ளது. இலங்கை அணி ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 10 வெற்றிகளை தொடர்ச்சியாக பெறுவது இது மூன்றாவது தடவையாகும்.

10 அணிகள் மோதிய இந்த தொடரில் முதல் சுற்றில் 4 போட்டிகளிலும், சுப்பர் 6 சுற்றில் 3 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது.

நெதர்லாந்து, இலங்கை அணிகளுக்கியிடலான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி இலங்கை அணியை துடுப்பாட பணித்தது.

இலங்கை அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது. இதில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய செஹான் ஆராச்சிஹே 57 ஓட்டங்களை பெற்றுக் கொணடார். குஷல் மென்டிஸ் 43 ஓட்டங்களையும், சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் லோகன் வன் பீக், ரயான் கிலெயின். விக்ரம்ஜித் சிங், ஷகிப் ஷுல்பிகீர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 23.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றது. இதில் மக்ஸ் ஓ டௌட் 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண 4 விக்கெட்களையும், டில்ஷான் மதுசங்க 3 விக்கெட்களையும், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply