பௌத்தர்களின் தலைசிறந்த வழிபாட்டுத்தளமான ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெரவிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்கட்டணத்தை எழுதிக் கொடுத்ததன் மூலம்,அரசாங்கம் தனது நேர்மையற்ற கொள்கைப் போக்கை வெளிப்படுத்தியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த இழிவான செயல் பௌத்த மதத்தையும், ஒட்டுமொத்த பௌத்த சமுதாயத்தையும், அவமதிக்கும் செயலாகும் என்பதோடு, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெரவை கவனத்திற் கொண்ட உலக சமூகத்திற்கும் இழைக்கப்பட்டதொரு கடுமையான அவமானமாக நான் கருதுகிறேன் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” இது எங்களுக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை நினைவு கூறுவதோடு இந்த தன்னிச்சையான முடிவை எடுத்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக குடியரச பெரஹெர போன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தயக்கமின்றி நிதி ஒதுக்கியது என்பதை இந்த தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரசித்தி பெற்ற தலதா பெரஹெரவிற்கு அரசாங்கம் அளிக்கும் கரிசனைகள் தொடர்பில் அதிருப்தி நிலவுகிறது.
இதற்கு முன்பும்,பல விகாரைகளை இலக்கு வைத்து கட்டுக்கடங்காத மின்கட்டணத்தை அரசாங்கம் பிறப்பித்துள்ளதோடு இது பெரும் அதிருப்திக்குறிய விடயமுமாகும்.
எந்தவொரு நாடும் தனித்துவமான பல கலாச்சார மத பெறுமான கட்டமைப்புகளை கொண்டுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, மத மற்றும் கலாசார விடயங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாது என்பதனை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு சலுகை விலையில் மின்சாரக் கட்டணம் அறவிடுவதை அரசாங்கம் தவிர்க்க முடியாது, மேற்கொள்ள வேண்டும் என்பதோடு இதற்காக கலாச்சார நிதியத்தின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை இவ்வாறு மேற்கொள்ளாது,மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாங்க முடியாத சுமையை சுமத்துவது குறித்து எங்களின் ஆழ்ந்த வெறுப்பையும், அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.