இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதற் போட்டி நேற்று (16.07) காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை துடுப்பாட பணித்தது.

எதிர்பார்த்தது போன்றே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹின் ஷா அப்ரிடி இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட்களை பதம் பார்க்க, இலங்கை அணி தடுமாறிப் போனது. பலமான துடுப்பாட்ட வீரர்கள் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நான்கு வீரர்கள் 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் இணைந்து இலங்கை அணியை மீட்டெடுத்தனர். 131 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அஞ்சலோ மத்தியூஸ் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, தனஞ்சய ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி 57 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் சதீர ஆட்டமிழந்தார்.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 95.2 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது. இதில் தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷஹின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள். ஷஹின் ஷா அப்ரிடி இதன் மூலம் 100 விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக தன் பெயரை பதிவு செய்துள்ளார்.

Social Share

Leave a Reply