இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதற் போட்டி நேற்று (16.07) காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாகி நடைபெற்று வருகிறது. தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதும், இப்போது வேகமாக அடித்தாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணைக்கையினை துரத்தி வருகிறது. இன்றைய(17.07) இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தடுமாறிய பாகிஸ்தான் அணி சோட் ஷகீல், அகா சல்மான் ஆகியோரின் இணைப்பாட்டம் மூலமாக தற்போது மீண்டுள்ளது. 101 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 120 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துள்ளார்கள். சோட் ஷகீல் 69 ஓட்டங்களையும், அகா சல்மான் 61 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். ஷான் மசூட் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூர்யா 3 விக்கெட்களையும், ரமேஷ் மென்டிஸ், கஸூன் ரஜித ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை துடுப்பாட பணித்தது.
முன்னதாக இன்று இலங்கை அணி 95.2 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது. இதில் தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 64 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷஹின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள். ஷஹின் ஷா அப்ரிடி இதன் மூலம் 100 விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக தன் பெயரை பதிவு செய்துள்ளார்.
இலங்கை அணியின் ஆரம்பத்தில் எதிர்பார்த்தது போன்றே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹின் ஷா அப்ரிடி இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட்களை பதம் பார்க்க, இலங்கை அணி தடுமாறிப் போனது. பலமான துடுப்பாட்ட வீரர்கள் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நான்கு வீரர்கள் 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் இணைந்து இலங்கை அணியை மீட்டெடுத்தனர். 131 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அஞ்சலோ மத்தியூஸ் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, தனஞ்சய ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி 57 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் சதீர ஆட்டமிழந்தார்.
இன்று தனித்து நின்று துடுப்பாடிய தனஞ்சய டி சில்வா தனது பத்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். பத்து சதங்களை பெற்ற பன்னிரண்டாவது வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த போட்டி அவரின் ஜம்பவாது போட்டியாகும்.