ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ள முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று(18.07) சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும், நீண்டநாளாக இழுபறியிலுள்ள சிறுபான்மையின தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகம் PTI செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று மதியம் பாராளுமன்றத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வருகின்றார். 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின் படி இந்தியா 13A திருத்த சட்டத்தை அமுற்படுத்த அழுத்தம் கொடுத்து வருகிறது. அது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க பேசிய போது பௌத்த மத தலைவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இராணுவத்திடம் உள்ள காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்ந்து வருகிறது. கூட்டமைப்பில் இல்லாத ஏனைய கட்சிகளும் 13 A ஐ அமுல் செய்ய அழுத்தம் வழங்குமாறு நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அமைச்சிடம் காணப்படுவதாகவும், அவை மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. அத்தோடு மாகாண சபை தேர்தலும் 2018 ஆம் ஆண்டிலிருந்து பிற்போடப்பட்டு வருவதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் கைது தொடர்பிலான விடயங்கள் தொடர்பிலும் இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.