சமத்துவம், நீதி, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில், மாகாணசபை தேர்தல், இந்திய வம்சாவளி மலையக தமிழருக்கு இந்திய ரூபா 75 கோடி ஒதுக்கீடு ஆகியவை, இந்திய பயணத்தில் பிரதமர் மோடி, எமது ஜனாதிபதிக்கு சொல்லி அனுப்பிய செய்தி. இவை இரண்டையும் வெறும் கட்சி அரசியல், இனவாத அரசியல் ஆகியவற்றுக்கு அப்பால், நாட்டின் அரசியல் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றை பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இவை எதுவும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழருக்கும், மலையக தமிழருக்கும் முழுமையான தீர்வுகளை தந்து விடப்போவதில்லை. ஆனால், இவற்றை செய்தாவது இலங்கை அரசு தனது நேர்மையை பறைசாற்ற வேண்டும் என இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்கேவுக்குமிடையிலான சந்திப்பு தொடர்பிலும், மோடியின் செய்தி தொடர்பிலும் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசுக்கு நன்றி. இலங்கையில் துன்புற்று வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியஅரசுக்கு எப்போதும் தார்மீக கடப்பாடு உண்டு. 1964ன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1987ன் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்ட பொறுப்பும் உண்டு. அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைதான் நாம் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை என இலங்கை இந்திய தலைவர்கள் சந்திப்பு மற்றும் இந்திய பிரதமரின் அறிவிப்புகள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.