தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியா பயணத்தின் போது இந்தியா பிரதமர் நரேந்திரா மோடி 13A திருத்தம் தொடர்பிலும் அதனை அமுற்படுத்துவது தொடர்பிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறியிருந்த நிலையிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு முன்னர் தமிழ் தரப்புகளை சந்தித்த வேளையில் பொலிஸ் அதிகாரமின்றி 13A ஐ முற்படுத்துவதாக உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்திய விஜயத்தின் போது 13A திருத்தத்துக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் சம்மதம் தெரிவித்தாகவும், அத்தோடு தமிழ் மக்களின் கண்ணியம் மற்றும் சுமூகமான முறையிலான வாழ்க்கையினை உறுதி செய்யுமாறும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணிலிடம் கூறியதாகவும் தகவல்களை அடிப்படையாக வைத்து ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.