பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் நியூசிலாந்து விஜயம் தொடர்பில் தெளிவுபடுதல்!

நியூசிலாந்துக்கான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவையின் ஆய்வு விஜயத்திற்காக அரசாங்க நிதி பயன்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட செயலாளர் நாயகம், அரசாங்க நிதியைப் பயன்படுத்தாமல் அபிவிருத்தி பங்காளிகளின் ஆதரவுடன் இந்த ஆய்வு விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பெண்களின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளில் இருந்து அனுபவத்தைப் பெறுவது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரவை உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அவையின் பொது இலக்குகளுக்காக அவர்கள் முன்நின்று அதன் தலைவி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்திற்கான தமது விஜயத்தின் போது, இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை, இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கு உதவுமாறு நியூசிலாந்தில் வாழும் இலங்கை சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆக்லாந்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை மற்றும் நியூசிலாந்தில் வாழும் இலங்கை சமூகத்தினருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்ற போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

நியூசிலாந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த வனுஷி வால்டர்ஸ் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இந்த பயணத்திற்கு நியூசிலாந்தை தெரிவு செய்தமை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். நியூசிலாந்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான மிகவும் சாதகமான கட்டமைப்புகள் மற்றும் இடங்களைக் கொண்ட பாராளுமன்ற முறைமை இருப்பது இலங்கைச் சூழலில் பெண்களின் அரசியல் செயற்பாடுகளை நன்கு புரிந்துகொள்ளவும், அதே நல்ல நடைமுறைகளை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.

நியூசிலாந்தில் வாழும் இலங்கை சமூகத்தினரிடையே உரையாற்றிய அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி, இந்த நேரத்தில் உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களின் ஆதரவு தாய்நாட்டிற்குத் தேவை என வேண்டுகோள் விடுத்தார். இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு பங்களிக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரவையின் துணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, (டாக்டர்) சீதா அரம்பேபொல, ரோஹினி குமாரி விஜேரத்ன, பவித்ராதேவி வன்னியாராச்சி, கீதா சமன்மலே குமாரசிங்க, தலதா அத்துகோரள, கோகிலா குணவர்தன, முதித பிரஷாந்தி, பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ரஜிகா விக்கிரமசிங்க, டொக்டர் குயசூரிய விக்கிரமசிங்க.இந்திரா திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹதியால்தெனிய ஆகியோர் இந்தச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தின் சார்பாக சர்வதேச அபிவிருத்திக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சியின் (யுஎஸ்ஏஐடி) முழு ஆதரவுடன் தேசிய ஜனநாயக நிறுவனம் (என்டிஐ) இந்த ஆய்வு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் நியூசிலாந்து விஜயம் தொடர்பில் தெளிவுபடுதல்!

Social Share

Leave a Reply